Wednesday, November 9, 2011

அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை புராதனவனேஸ்வரர் திருக்கோயில் -திருச்சிற்றம்பலம்( Thiruchitrambalam)


'பூ விழுங்கி' விநாயகர்


அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை புராதனவனேஸ்வரர் திருக்கோயில்,
திருச்சிற்றம்பலம் -பட்டுக்கோட்டை வட்டம்- 614 601- தஞ்சாவூர் மாவட்டம்.
Sri Periyanayaki Amman Temple- Thiruchitrambalam


தல வரலாறு கோயில் தலபுராணம்



இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ புராதனவனேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரியநாயகி.
உடன் அமைந்துள்ள சன்னதிகள்: நடராஜர்,ஸ்ரீ ஆஞ்சநேயர்,ஸ்ரீ கணபதி,முருகன்,
வெங்கடாஜலபதி,ஸ்ரீ லக்ஷ்மி,
தல மரம் :
தீர்த்தம் :
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
வழிபட்டோர் : சுந்தரர்,திருஞான சம்பந்தர்
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - தேங்கூ ருந்திருச் (7-12-4).
திருச்சிற்றம்பலம் இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)

7.12 திருநாட்டுத்தொகை

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

112

வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர்
தாழை யூர்தக டூர்தக்க ளூர்தரு மபுரம்
வாழை காய்க்கும் வளர்மரு கல்நாட்டு மருகலே.

7.12.1
113

அண்டத் தண்டத்தின் அப்புறத் தாடும் அமுதனூர்
தண்டந் தோட்டந்தண் டங்குறை தண்டலை யாலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ்கழிப் பாலை கடற்கரை
கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக் கைநாட்டுக் குறுக்கையே.

7.12.2
114

மூல னூர்முத லாயமுக் கண்ணன் முதல்வனூர்
நால னூர்நரை ஏறுகந் தேறிய நம்பனூர்
கோல நீற்றன்குற் றாலங் குரங்கணின் முட்டமும்
வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே.

7.12.3
115

தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளி
பாங்கூர் எங்கள் பிரானுறை யுங்கடம் பந்துறை
பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி பயிலுமூர்
நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை யூர்நாட்டு நறையூரே.

7.12.4
116

குழலை வென்ற மொழிமட வாளையோர் கூறனாம்
மழலை யேற்று மணாளன் இடந்தட மால்வரைக்
கிழவன் கீழை வழிப்பழை யாறு கிழையமும்
மிழலை நாட்டு மிழலைவெண் ணிநாட்டு மிழலையே.

7.12.5
117

தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர்
பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம்
என்னூர் எங்கள் பிரானுறை யுந்திருத் தேவனூர்
பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி சைநாட்டுப் புரிசையே.

7.12.6
118

ஈழ நாட்டுமா தோட்டந்தென் னாட்டிரா மேச்சுரம்
சோழ நாட்டுத் துருத்திநெய்த் தானந் திருமலை
ஆழி யூரன நாட்டுக்கெல் லாம்அணி யாகிய
கீழை யில்லர னார்க்கிடங் கிள்ளி குடியதே.

7.12.7
119

நாளும் நன்னிலந் தென்பனை யூர்வட கஞ்சனூர்
நீள நீள்சடை யான்நெல்லிக் காவு நெடுங்களங்
காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர்
வேளார் நாட்டுவே ளூர்விளத் தூர்நாட்டு விளத்தூரே.

7.12.8
120

தழலும் மேனியன் தையலோர் பாகம மர்ந்தவன்
தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதிசோற் றுத்துறை
கழலுங் கோவை யுடையவன் காதலிக் கும்மிடம்
பழனம் பாம்பணி பாம்புரந் தஞ்சைதஞ் சாக்கையே.

7.12.9
121

மைகொள் கண்டனெண் டோளன்முக் கண்ணன் வலஞ்சுழி
பைகொள் வாளர வாட்டித் திரியும் பரமனூர்
செய்யில் வாளைகள் பாய்ந்துக ளுந்திருப் புன்கூர்நன்
றையன் மேய பொழிலணி ஆவடு துறையதே.

7.12.10
122

பேணி நாடத னிற்றிரி யும்பெரு மான்றனை
ஆணை யாவடி யார்கள் தொழப்படும் ஆதியை
நாணி ஊரன் வனப்பகை யப்பன்வன் றொண்டன்சொல்
பாணி யாலிவை யேத்துவார் சேர்பர லோகமே.

7.12.11

திருச்சிற்றம்பலம்


திரு + சித் + அம்பலம் - அம்பலம் (

திருச்சிற்றம்பலம் )

என்றால் மேடை என்று பொருள். பொன்னம்பலத்தில் ஆனந்த தாண்டவம் ஆடி ஞான மார்க்கத்தை விளக்குவதால் நாதனுக்கு இத்திரு நாமம் வரப்பெற்றது.

தேவாரம் ஓதுவதற்கு முன் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி விட்டுத் தொடங்குவது மரபு காரணம். அதனால் தான் திருமுறை ஓதுபவர்கள் ஆரம்பத்திலும் முடிவிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள்.இந்த புண்ணிஸ்தலம் தான் சைவத் திருமுறைகளைப் பாதுகாத்து உபசரித்து வந்துள்ளது.

சிறப்புக்கள்

'பூ விழுங்கி' விநாயகர்

இக்கோயிலில் அம்பாள் சன்னதியில் வலப்புறம் பழம் பெருமை வாய்ந்த விநாயகர் உள்ளார்.இத்தல விநாயகரைப் பிரார்த்தனை செய்வோர் விநாயகரின் இரு காதுகளிலும் பூக்களைச் செருகிவைத்து வேண்டுகின்றனர்; பிரார்த்தனை நிறைவேறுமாயின் விநாயரின் செவித் தூவாரங்களில் செருகப் பெற்ற பூக்கள் உள்ளே இழுத்துக் கொள்ளப்படுகின்றன.இவ்விநாயகர் உள்ளே இழுத்துக் கொண்டால் நமது வேண்டுதல் நிறைவேறும், நினைத்த காரியம் கைகூடும். இதனால் இத்தல விநாயகர் 'பூ விழுங்கி' விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

பக்தர்களின் நம்பிக்கையாக இன்றும் பூவைக்கும் பழக்கம் இருக்கிறது.

இங்குள்ள நடராஜர் 'அம்பலத்தாடுவார்' ஆவார்

கோயிலின் பக்கத்திலும், எதிரிலுமாக இரு தாமரைக் குளங்கள் நல்ல நிலையில் உள்ளன. மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இங்குள்ள கல்வெட்டுக்கள் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் காலத்தியவை.

இத்தலத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் வயல்வெளியில் தனி இடத்தில் எமன் வீற்றிருக்கிறார்.ஒருசமயம் தேவர்கள், சிவபெருமானை வேண்டச்சென்ற போது, அவர் நிஷ்டையில் இருந்தார். எனவே, மன்மதனை வரவழைத்து அவன் மூலமாக சிவன் தவத்தை கலைத்தனர். இதனால் கோபம் கொண்ட சிவன், மன்மதனை அழித்தார்.

பின் ரதிதேவியின் வேண்டுதலுக்காக இத்தலத்திற்கு அருகிலுள்ள ஓர் தலத்தில் உயிர்பித்தார். அப்போது எமதர்மன், சிவனிடம் தனக்கு அழிக்கும் பணி கொடுத்திருக்கும்போது, அதனை செய்ய தனக்கு உத்தரவிடும்படி வேண்டினார்.

சிவனும் அவருக்கு அருள்புரிந்தார். இதன் அடிப்படையில் பிற்காலத்தில் இவ்விடத்தில் எமதர்மனுக்கு கோயில் கட்டப்பட்டது.

தல வரலாறு:

வனவாசமும் வாழ்க்கையின் அவசியமே என உலகிற்கு உணர்த்திட இறைவன் தன் தேவியுடன், வனப்பிரதேசமாக விளங்கிய இப்புராதனவனத்தில் தங்கி, தேவர்களும், சித்தர்களும், துறவிகளும் சூழ வந்தமர்ந்தார்.

இத்தலத்தில் காமனை எரித்ததற்கு சான்றாக "காமன் கொட்டல்' என்ற இடத்தில் காமன் பண்டிகை விழா நடக்கிறது.

பிரார்த்தனை:

ஸ்ரீ
பெரிய நாயகி அம்மனை வழிபட்டால் குழந்தை வரம் கிட்டும். நோய்கள் தீரும். காளையர்களுக்கும், கன்னியர்களுக்கும் நல்ல மணமாலையும், வாழ்வும் அமையும் என்பது நம்பிக்கை

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

திருவிழா:

மகா சிவராத்திரி,மாசி மகத் திருவிழா,வைகாசி விசாக திருவிழா (வெள்ளி ரதம் பவனி,தேரோட்டம்,தீர்த்தம்,தெப்பம்)ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பனிரெண்டு மண்டகப்படிதாரர்கள் என்று சொல்லப்படும் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் கொண்டாடுவர்
கள்.

அமைவிடம்(Loaction)-
மாநிலம் : தமிழ் நாடு ( Tamil Nadu)
திருச்சிற்றம்பலம் -பட்டுக்கோட்டை வட்டம்- 614 601- தஞ்சாவூர் மாவட்டம்.
பட்டுக்கோட்டை - அறந்தாங்கிச் சாலையில் உள்ளது. பட்டுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ.; அறந்தாங்கியிலிருந்து 34 கி.மீ.ல் சாலையோரத்தில் கோயில் உள்ளது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அன்புடனும்
Govindaraj.K
kgovindaraj.tcbm@gmail.com

No comments:

Post a Comment